Vaasanthi
இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தப் புதினத்தைப் படிக்கும் போது எனக்கு ஒரு திகைப்பு ஏற்படுகிறது. நான் எழுதத் துவங்கிய காலகட்டத்தின் ஆரம்ப நாவல்களில் இது ஒன்று என்பதால் எழுத்து நடை இப்போதைய எனது நடையிலிருந்து வேறுபட்டிருப்பது வியப்பிற்குரிய விஷயமில்லை. ஆனால், இது ஒரு நிஜக்கதை என்பதும், இதை ஒரு புதினமாக சற்று கற்பனையுடன் நான் எழுதத் துணிந்ததும்தான் எனக்கு இப்போது திகைப்பைத் தருகிறது. எழுபதுகளில் நான் தமிழ் மாநிலத்துக்கு வெளியில் இருந்தபடி எழுத ஆரம்பித்தபோது நான் யாரென்றே தெரியாமல் என் எழுத்தை மட்டுமே கவனித்து எனக்கு ஆதரவளித்த தமிழ் பத்திரிகைகளுக்கு எனது நன்றி என்றும் உரித்தாகும். நேபாளத்தில் இருந்த நான்கு ஆண்டுகளில் பல நாவல்களை நான் முழுமையாக எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவது வழக்கம். அப்படி முழுவதுமாக எழுதி அனுப்பப்பட்ட நாவல்தான் 'மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள்' நாவலும். நாவலுக்குக் கரு வேண்டும் என்று நான் அலைந்ததும், லட்டு போல இந்த நிஜக் கதையை என் தோழி என்னிடம் சொன்னதும், கதை பசைபோல என்னுள் பதிந்ததும் எனக்கு இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. உண்மை என்பது புனை கதையைவிட வினோதமானது என்று சொல்வார்கள். இந்தக் கதையை நான் கேட்டபோது எனக்கு அப்படித்தான் இருந்தது. இப்படியெல்லாம் கூட நிஜ வாழ்வில், படித்த நாகரிக குடும்பங்களில் நடக்குமா என்கிற அதிர்ச்சி ஏற்பட்டது. உண்மையில் இந்தப் புதினத்தை நான் எழுத ஆரம்பித்தபோது நிஜ வாழ்வில் அந்தப் பெண் - அனுபவித்த துன்பங்களையெல்லாம் என்னால் ஆத்மார்த்தமாக உணர முடிந்தது. பலமுறை எழுதும்போது கண்ணீர் வடித்தது நினைவுக்கு வருகிறது. எத்தனையோ கஷ்டத்தையெல்லாம் வாய் திறக்காமல் ஒரு படித்த பெண் ஏற்பாளா என்று தோன்றும். ஆனால், நிஜ வாழ்வில் அந்தப் பெண் அப்படித்தான் இருந்தாள். கடைசியில் ஏதோ ஒரு அற்புதத்தால்தான் அவள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டு, ஒரு நரகத்திலிருந்து வெளிப்பட்டுப் பிறகு மீண்டும் காதல் துளிர்த்து புது வாழ்வு கண்டாள். இந்தப் புதினத்தில் என்னுடைய கற்பனை இருபது சதவிகிதம் தான் இருக்கும். இதில் வரும் சம்பவங்கள் எல்லாம் கதைப் போக்கிற்கு ஏற்ப மாறியிருக்குமே தவிர அவ்வளவும் உண்மை என்று சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. என் கதையை எழுதுங்கள், என்னைப் போன்ற பல சாதுப் பெண்கள் விழிப்படைவார்கள் என்று அந்தப் பெண் கேட்டுக் கொண்டதாலேயே நான் இந்த நாவலை எழுதினேன். ஆனால், உண்மைக் கதை என்பதாலேயே, ஒரு நாவல் போட்டியில் இது பரிசு பெறத் தகுதி இழந்தது. பரிசளிக்கத் தேர்ந்தெடுக்கும் குழுவில் அந்தப் பெண்ணின் உறவினர் இருக்க நேர்ந்ததால் இதைத் தேர்வு செய்யத் தயங்கியதாக நான் பின்னால் அறிந்தேன். ஆனால், அந்தத் தேர்வுக் குழுவில் இருந்த தினமணி ஆசிரியர் வாசுதேவன் அவர்கள், மிகவும் ஆர்வத்துடன் தினமணிக் கதிரில் இதை வெளியிட முன் வந்தார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதால் அந்தக் காலகட்டத்தில் இருந்த பழமைவாத எண்ணங்கள், பயங்கள், தயக்கங்கள் இவை எல்லாவற்றையும் இதில் வரும் கதாநாயகியும், பெரியவர்களும் பிரதிபலிக்கிறார்கள். நிஜவாழ்விலும் அவர்களுக்கு அப்படிப்பட்ட பயங்கள் இருந்ததை நான் அறிவேன். இப்போது காலம் மாறிவிட்டது. பெரியவர்கள் கூட முற்போக்காக சிந்திக்கும் காலம் இது. ஆனால், இன்றும் இதில் வரும் ஆனந்தியின் கணவன் ரகுவைப் போல வக்கிர குணம் படைத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனந்தியைப் போல வாயை மூடிக் கொண்டு முடிவெடுக்க தைரியமில்லாமல் இருக்கும் பெண்கள் அநேகம். ஆனந்தி தெய்வாதீனமாக இக்கட்டிலிருந்து தப்பினாள். அப்படிப்பட்ட வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. இந்த நாவல் எந்தப் பெண்ணிய கோஷத்தையும் எழுப்பும் எண்ணத்துடன் எழுதப்பட்டது இல்லை. உள்ளது உள்ளபடி என்ற ஒரு வெகுளித்தனத்துடன் கேட்ட கதையைத் திருப்பிச் சொன்னதாகத் தான் தோன்றுகிறது. இன்று நான் எழுதுவதற்கும் அன்று நான் எழுதியதற்கும் நிறைய வித்யாசம் நடையிலும், பாணியிலும் இருந்தாலும் வாசகர்கள் பல வருஷங்களுக்குப் பிறகு வரும் இந்த நாவலை ரசித்துப் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.
- வாஸந்தி
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன. கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர். பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது. சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.