பிரவீணா தங்கராஜ் என்று நாவல் எழுத்தாளராக அடையாளப்படுத்தி கொள்ளும் நான் சென்னையில் வசிப்பவள். சிறு வயதில் தங்கமலர், சிறுவர்மலர் கல்கண்டு இதழ் என்று புத்தகம் வாசிக்கும் எனது பயணம் இதோ தொடர்ந்து கொண்டே வந்து நாவல் எழுத்தாளராக மறியுள்ளேன்.
நம் வாழ்வில் சின்ன சின்ன நிகழ்வுகளை சுவைப்பட எழுதி வைப்பதற்கு டைரி தேவைப்படும். அப்படி ஆரம்பித்து எழுத பழகியதே என் எழுத்தின் ஆரம்பம். கல்லூரியில் விளையாட்டாய் கவிதையை கிறுக்கி தோழிகளிடம் காட்டி எனது முதல் கிறுக்கல்கள் ஆரம்பமானது. சின்ன சின்னதாய் வாழ்க்கையில் என்னோடு கலந்தவையை கவிதை மூலம் இயற்றி இரண்டாம் கட்டத்திற்கு வந்தேன். சமூகத்தின் மீது எழும் கோபத்தையும், இயற்கையை ரசிப்பதையும், எழுத அடுத்து அத்தியாயமாக காதலையும் எழுத வைத்து கவிதை வடித்தேன்.
கதை படிக்க ஆரம்பித்து புத்தகப் ப்ரியையான என்னை, கவிதை மட்டுமா? கதையும் எழுது என்ற மனசாட்சியின் தூண்டுதலில் எழுத துவங்கியது. நாம் நம் வாழ்வில் பொதுவெளியில், விழாக்களில், நல்லது கெட்டது நிகழ்ச்சியில் என்று பல அனுபவத்தினை காண்போம். அதனை நாயகன் நாயகியாக உருவகித்து பிரச்சனையை அவர்களுக்குள் ஏற்றி, அதற்கு தீர்வும் கொடுத்து நாமும் ஒரு பிரம்மனாய் கதாபாத்திரத்தின் மீது தலையெழுத்தாக எழுதி அவர்களை கதை மாந்தர்களாக நடமாட வைப்பதே ஒரு அலாதி மகிழ்ச்சி.
அப்படிப்பட்ட அலாதியை விரும்பி நாவல்களை படைக்க ஆரம்பித்து இதோ வாசகர்களான உங்கள் முன் நாவல் எழுத்தாளராக மாறியுள்ளேன். எனது கதைகளின் பட்டியலும், சுட்டிகளும் அறிந்திட praveenathangaraj.blogspot.com என்ற தளத்தில் காணலாம். மேலும் ராணி முத்து நாளிதழில் பிரம்மனின் கிறுக்கல்கள் என்ற நாவலும் ஜூன் 16, 2022 வெளியாகி உலகத்திற்கு என்னை அடையாளப்படுத்தியது.