Ja. Ra. Sundaresan
நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.
37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.
ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.
இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.
சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் கொண்டவர். இரு ரிக்ஷாக்காரர்கள் பேசிக் கொள்வது போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்ட கருத்துக்களை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.